நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்த உள்ளார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுவரும் நிலையில், புதிய பாரதம் என்ற கருப்பொருளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
அத்துடன் பாகிஸ்தானை மண்டியிட வைத்த ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றும்போது, இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெலிகாப்டர் தேசியக் கொடியையும் மற்றொன்று ஆப்ரேஷன் சிந்தூர் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியையும் ஏந்திச் செல்லும்.
இந்த விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். பிரதமர் மோடி 12வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.