சுமார் 200 ஆண்டுகளாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமை பட்டு, பாழ்பட்டுக் கிடந்த பாரதம், சுதந்திரம் பெற்றது. வாய்மையே வெல்லும் என்ற வேத மொழிக்கு ஏற்ப, இந்தியா தர்மத்தால் வென்றது. அதர்மத்தை வீழ்த்தியது. ஆனாலும், சுதந்திரத்தின் போது பரந்த பாரதம் இரண்டு துண்டானது. தேசப் பிரிவினையில்,பல லட்சம் அப்பாவி இந்துக்கள் கொல்லப் பட்டனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுதந்திர பாரதத்தின் முதல் விடியல். நாடெங்கும் சுதந்திரக் காற்று. டெல்லி தொடங்கி நாட்டின் மூலை முடுக்கெல்லாம், முந்தைய இரவு முழுவதும் சுதந்திரக் கொண்டாட்டங்கள் களை கட்டியது.
சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் ஆனந்த சுதந்திரத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக இருந்தனர். அன்றைய காலை நாளிதழ்களில் எல்லாம் முதல் பக்கம் பெரிய செய்தியாக இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி வெளிவந்தது.
கல்கத்தா அமைதியாக விழித்தது. கலவரமோ,வன்முறைகளோ நடக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன் கண்ணில் பட்ட இந்துக்களை எல்லாம் வெட்டி சாய்த்த முஸ்லீம்கள், அதிசயமாக இந்துக்களைக் கட்டித் தழுவி சுதந்திர வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பேலியாகாட்டில், காந்தி தங்கியிருந்த ஹதரி மஞ்சிலுக்கு மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஆம் தேதி முழுவதும் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப் போவதாகக் காந்தி அறிவித்திருந்தார்.
இந்தியாவின் தகவல் ஒலிபரப்பு துறை அதிகாரிகள், காந்தியிடம் சுதந்திரத் தினச் செய்தியைப் பெற வந்தனர். அவர்களிடம் சொல்வதற்கு எந்த செய்தியும் இல்லை என்று காந்தி உறுதியாகக் கூறிவிட்டார்.
காந்தியை நேரில் வந்து சந்தித்த மேற்கு வங்க ஆளுநர் ராஜாஜி, கல்கத்தா அமைதியாக இருப்பதாகத் தெரிவித்தார். டெல்லியில் 9 மணிக்கு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டனுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி, ஹரிலால் ஜெய்கிஷன் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்பிறகு, டெல்லி கவுன்சில் மாளிகையில், அசோக சக்கரம் பொறிக்கப் பட்ட மூவர்ணக் கொடியை முதல்முறையாக,முதல் பிரதமர் நேரு ஏற்றினார். தேசிய கீதம் முடிவாகாத நிலையில் வந்தே மாதரம் முழக்கம் விண்ணைப் பிளந்தது.
அதேநேரம், மும்பையில், எந்த சுதந்திரத்துக்காக அந்தமான் தனிச் சிறையிலும், பின் வீட்டுக் காவலிலும் 15க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்த விநாயக் தாமோதர் சாவர்க்கர், காலை கண் விழித்ததிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.
அவர் மிகவும் நேசித்த பாரதம் துண்டாடப்பட்டது அவர் நெஞ்சில் முள்ளாகத் தைத்திருந்தது. தகுதி அற்றவர்களின் கையில் பாரதத்தின் ஆட்சி அதிகாரம் போனது அவருக்கு வருத்தமாகவே இருந்தது.
இந்து மகா சபையைச் சேர்ந்த பலரும் அவரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், புரட்சி வீரர் சாவர்க்கர் இரண்டு கொடிகளை ஏற்றினார். ஒன்று அகண்ட பாரதத்தின் காவிக் கொடி; மற்றொன்று சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி ; இரு கொடிகளுக்கும் மலர்களைத் தூவி, வணங்கினார்.
மாலை 4.30 மணிக்கு நேரு, இந்தியா கேட் மைதானத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருக்கத் தேசியக் கொடியை ஏற்றினார்.மழை பெய்து நின்ற நிலையில் வானில் ஒரு அழகான வானவில் அலங்காரமாகத் தோன்றியது. அந்த வானவில், தேசியக் கொடியின் மேல் ஒரு மகுடமாக விளங்கியது.
இந்நிலையில், டாக்டர் அம்பேத்கரின் முழு மக்கள் தொகை பரிமாற்றத் திட்டத்தைக் காங்கிரஸ் நிராகரித்த காரணத்தால், சுதந்திரத்துக்குப் பின், பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருந்தனர். இதனால், நாட்டின் பல பகுதிகளிலும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன.
லாகூரில் இருந்த பஞ்சாப் எல்லை படை தலைமையகம்,முஸ்லீம்களால் முற்றிலுமாக எரித்து தரைமட்டமாக்கப் பட்டது. இன்னமும் காஷ்மீர் இந்தியாவுடன் சேராமல் இருந்தது. நிஜாம் ஆட்சியில் இருந்த ஹைதராபாத்திலும் இந்துக்கள் கடும் கொடுமைகளைச் சந்தித்தார்கள். கோவா, போர்த்துகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
அதேபோல் பாண்டிச்சேரியும் சந்தர் நகரும் இந்தியாவுடன் இணையவில்லை. நேருவின் பிடிவாத கொள்கையால், கான் அப்துல் கபார் கான் கட்டுப்பாட்டில் இருந்த வடமேற்கு எல்லைப் பகுதியும் இந்தியாவுடன் சேராமல் இருந்தது.
புதிய சகாப்தத்துக்கு அடியெடுத்து வைக்கும் நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிறைந்திருந்தது. சுதந்திர இந்தியா பலவீனமான நிலையில் இருந்தது.
தேசப் பிரிவினைக்குப் பின், இந்தியாவின் எல்லைகளைக் கொண்ட வரைபடம், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதியே தயாராகி விட்டது. பிறகு, ஆகஸ்ட் 17-ம் தேதி, இந்தியாவின் வரைபடம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
விடுதலை கிடைத்த 3வது நாளில் இருந்து இந்தியாவில் முஸ்லீம்கள் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போனது. மூன்று மாதங்கள் இஸ்லாமியர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நேருவின் அரசு திணறியது.
காபாலி பழங்குடியினர் என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் மீது படையெடுத்து ,காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. 1948 ஜனவரி 30 ஆம் தேதி, காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஜூன் மாதம் தன் பணி முடிந்து மவுண்ட்பேட்டன் இங்கிலாந்துக்குத் திரும்பினார். தொடர்ந்து செப்டம்பர் 11 ஆம் தேதி ஜின்னா காலமானார்.
அதே ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, இராணுவ நடவடிக்கையின் மூலம் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. தேசப் பிரிவினையின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. அதன் ஒரு பகுதியாக எல்லைதாண்டிய பயங்கரவாதம் தொடர்கிறது.
சுதந்திர இந்தியா என்று பெருமை பேசும் போதெல்லாம்,தேசப் பிரிவினையின் கொடூரங்களையும் நினைவில் கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.