79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அமைச்சர் ரகுபதி, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்குத் தலைமை நீதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.
இதேபோன்று, சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், முதன்மை தலைமை ஆணையர் நாகேந்திர பிரசாத் மூவர்ணக் கொடியேற்றி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். சுதந்திர தினத்தில் அனைவரும் நேர்மை, சேவை மற்றும் செயல்திறனின் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக்கு, சேவை மற்றும் கலால் வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில், தலைமை ஆணையர் மதன் மோகன் சிங் மூவர்ணக் கொடியேற்றி வைத்தார்.
அப்போது, மூவர்ணக்கொடி நிறத்தில் பலூன்கள் பறக்க விடப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பயம் இன்றி, தலை உயர்ந்து நிற்பதே உண்மையான சுதந்திரம் எனத் தெரிவித்தார். மேலும், உண்மையான சுதந்திரம் கொண்ட இந்தியாவை உருவாக்க நாம் முழு மனதுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா விமரிசையாக நடைபெற்றது.
அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் சுதாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சுதேசி ராணுவத்தின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. மேலும், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் மது மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர்.