செயற்கை நுண்ணறிவுதான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி என பல்வேறு தரப்பில் கருத்துக்கள் பரவினாலும், செயற்கை நுண்ணறிவால் மனிதக் குலமே அழியும் நிலை உருவாகலாம் என AI-யின் காட் ஃபாதராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்படிக் கூற காரணம் என்ன? இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி என்ன? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
உலகம் நவீனமயமாகி வரும் இந்த காலகட்டத்தில் திரும்பிய திசையெல்லாம், செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சியை எளிதாகக் காண முடிகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும், அதன் மூலம் பல்வேறு ஆபத்துகளும் உருவாக வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் AI புரட்சியை ஏற்படுத்திய AI TOOLS-களின் காட் ஃபாதராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரிட்டிஷ் – கனடா வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப்ரி ஹிண்டன், AI தொழில்நுட்பத்தால் மனிதக் குலமே அழியும் அபாயம் ஏற்பட 20 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அபாயத்தைக் குறைக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஜெஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற AI தொழில்துறை மாநாட்டில் பங்கேற்ற ஜெஃப்ரி ஹிண்டன், AI அமைப்புகள் நம்மைவிட மிகவும் புத்திசாலித்தனமானதாக இருக்கும் எனவும், மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வேண்டியதை அவை செய்யும் எனவும் தெரிவித்திருந்தார். ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதைப் போல வருங்காலத்தில் AI அமைப்புகள் நம்மை எளிதாக ஏமாற்ற அதிக வாய்ப்பிருப்பதாகவும் ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்தார்.
இந்த செயற்கை நுண்ணறிவு குறித்த சமீபத்தைய ஆய்வு முடிவுகளும் ஜெஃப்ரி ஹிண்டனின் வார்த்தைகளை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக AI அமைப்புகள் தங்கள் இலக்கை அடைய ஏமாற்றுதல், மோசடி செயல்களில் ஈடுபடுதல் மற்றும் திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை மெய்யாக்கும் வகையில், ஒரு AI மாடல் மின்னஞ்சலில் இருந்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, சம்மந்தப்பட்டவரின் திருமணம் தாண்டிய உறவை வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் சுய பாதுகாப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஜெஃப்ரி ஹிண்டனின் எச்சரிக்கையை நாம் அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்நிலையில், வரவிருக்கும் இந்த ஆபத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஒரு தீர்வையும் ஜெஃப்ரி ஹிண்டன் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக AI கருவிகள் மனித அறிவை விஞ்சும்போது அவை, என்ன செய்தாவது உயிர்வாழ வேண்டும், அதீத கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என இரு முக்கிய இலக்குகளை தனக்குள் கொண்டிருக்கும் என ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார்.
இது நடக்கும் பட்சத்தில் AI கருவிகள் ஆபத்தானதாக மாறக்கூடும் எனத் தெரிவித்துள்ள அவர், இதைத் தவிர்க்க அவற்றினுள் தாய்மை உணர்வைப் புகுத்த வேண்டியது அவசியம் எனவும், அதன் மூலம் அவை மனித அறிவை விஞ்சினாலும் மனிதர்கள் மீது உண்மையான அக்கரை செலுத்தும் என்றும் ஜெஃப்ரி ஹிண்டன் விளக்கியுள்ளார்.
தாய்-சேய் உறவை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மனிதக் குலம் AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பி பிழைக்க இதுவே ஒரே வழி எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.