நாகலாந்து ஆளுநர் இல கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இல.கணேசன் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இல.கணேசன் என கூறியுள்ள அவர், தமிழகம் முழுவதும் பாஜகவை வளர்த்தெடுக்க பாடுபட்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தேசபக்தி, தமிழ் பண்பாட்டின் மீதான பற்றுக்காக இல.கணேசன் என்றென்றும் நினைவில் நிற்பார் எனவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இல கணேசன் என தெரிவித்துள்ளார். அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என கூறியுள்ள ஆர்.என்.ரவி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தில் பாஜகவை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இல.கணேசன் பெரும்பங்காற்றியதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் இல.கணேசன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இல.கணேசனின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர் என கூறியுள்ள அண்ணாமலை, இல.கணேசனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.