இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது கூட, ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஓரு காரணமாக இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை ஓரம் கட்ட நினைத்த ட்ரம்ப், முதலில் இந்தியாவை குறிவைத்தார். முதலில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், மோடி அரசு அசைந்து கொடுக்காததால் மேலும் 25 சதவீத வரி விதித்தார். இதற்கும் இந்தியா பெரியளவில் அலட்டி கொள்ளாத போதும், பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான், ட்ரம்ப் – புதின் சந்திப்பும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், இந்தியா உடனான வர்த்தகத்தை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில்கூட புதின் தன்னை சந்திக்க நினைத்திருக்கலாம் என கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் தனது அரசின் வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு சாதகமாகவே அமைந்திருப்பதாக, மார்தட்டி கொள்கிறார் டொனால்டு ட்ரம்ப்.