நாகாலாந்து மாநில ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 80-வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 1945-ம் ஆண்டு இலக்குமிராகவன் அலமேலு தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இல.கணேசன் அந்த அமைப்பின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வந்தார்.
நாட்டிற்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருந்த இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தார். தொடர்ந்து அரசியல் ஈடுபாடு காரணமாகத் தன்னை பாஜக-வில் இணைத்துக்கொண்டார் இல.கணேசன்.
கட்சிப் பணிகளில் இல.கணேசனின் ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக-வின் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தார் இல.கணேசன்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்கள் மீதான பற்றால் பொற்றாமரை என்ற தமிழ் மொழி சார்ந்த அமைப்பை இல.கணேசன் நடத்தி வந்தார். மக்கள் பணியில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த இல.கணேசன், கடந்த 2016-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் நீடித்தார்.
பாஜக-வின் நீண்டகால உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசனை, கடந்த 2021-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமித்து அழகு பார்த்தது கட்சியின் தலைமை. அதே காலகட்டத்தில் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்த இல.கணேசன், 2023-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அண்மையில் சென்னை வந்திருந்த இல.கணேசன் தவறி கீழே விழுந்து காயமடைந்ததால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இல.கணேசனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இயற்கை எய்தினார்.
நாட்டின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.