கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப் படும் நிலங்கள் பகல் நேரங்களில் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
426 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதலாக 626 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கம்பி வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் உணவக கழிவுகளும், தொழிற்சாலைகள் கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கின்றன.
தொடர்ந்து கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளால் குறிப்பிட்ட பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் நடமாடும் வாகனங்களால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேற்றும் இடமாகவும் மாறிவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சட்டத்திற்குப் புறம்பாகக் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதாலும் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அப்பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும் பறவைகள் குடியிருப்பதாகக் கூறி மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது கொட்டப்படும் கழிவுகளை உண்ண வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால் மீண்டும் விமானங்களைத் தரையிறக்கும் போது இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கோவை விமான நிலைய விரிவாக்கம் எந்தளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.