அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தி உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் துறை பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசிற்குத் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.