CHAT GPT உருவாக்கிய உணவு முறை திட்டத்தைப் பின்பற்றி முதியவர் ஒருவர் அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
உலகம் முழுவதும் தற்போது AI தொழில்நுட்பங்களைக் குறித்தே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. CHAT GPT போன்ற உருவாக்கும் திறன் சார்ந்த AI செயலிகளின் வருகை, நமது வேலை செய்யும் போக்கை மாற்றியுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அண்மைக்காலமாக CHAT GPT தான் பலரின் நெருங்கிய நண்பராகவும், தனிப்பட்ட ஆலோசகராகவும் கூட மாறி இருக்கிறது. இந்த செயல்பாடு மனிதர்கள் மத்தியில் உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனத் தொடர்ச்சியாக துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பொதுமக்கள் பலரும் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளைப் பரிந்துரைக்க CHAT GPT-ஐ அணுகத் தொடங்கியிருப்பது கூடுதல் அதிர்ச்சி. குறிப்பாக 60 வயது முதியவர் ஒருவர் தனது உணவுப் பழக்கங்களை மாற்ற CHAT GPT-யின் உதவியை நாடி, அதனைப் பின்பற்றியதால் தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த அந்த முதியவர் தனது உணவில் அதிக சோடியம் குளோரைடு சேர்த்துக்கொள்வதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என படித்துள்ளார். அதனால் தனது உணவிலும், ரத்தத்திலும் சோடியம் குளோரைடை குறைக்க எண்ணிய அவர், அதற்கு மாற்றாக எதைப் பயன்படுத்தலாம் என CHAT GPT-ஐ வினவியுள்ளார்.
அப்போது CHAT GPT-யும் முதியவருக்கு உணவு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. தொடர்ந்து 3 மாதங்களாக CHAT GPT அளித்த DIET PLAN-ன் அடிப்படையில்தான் அவர் உணவு உட்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது வீட்டில் சுயநினைவின்றி மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில், அவருக்கு புரோமிசம் எனப்படும் 19-ம் நூற்றாண்டின் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் புரோமைட் அளவும், எலக்ரோலைட் அளவும் இயல்பைவிட மிக அதிகமாக இருந்ததையும் மருத்துவர்கள் தெரிந்துகொண்டனர்.
புரோமிசம் என்பது ஐரோப்பிய நாடுகளில் 1800 மற்றும் 1900-களில் பரவலாகக் காணப்பட்ட ஒருவகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அப்போது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தலைவலி சிகிச்சைக்கு புரோமைட் உப்புகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டதே, புரோமிசம் நோய் ஏற்படக் காரணமாக அமைந்தது என்பது பின்னர் தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவரின் நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது. சித்த பிரம்மை பிடித்ததுபோல் தனக்கு மாயத் தோற்றங்கள் தென்படுவதாகவும் அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின் அவருக்கு பல்வேறுகட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், மனநல ஆலோசகர் உதவியுடன் அவரிடம் பேசியபோதே உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக உணவில் சோடியம் குளோரைடுக்கு பதிலாக CHAT GPT பரிந்துரைத்த சோடியம் புரோமைடை அவர் கடந்த 3 மாதங்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அதுவரை எந்தவித உடல் பிரச்சனையும் இல்லாமல் இருந்த அவருக்கு, அந்த காலகட்டத்தில் தூக்கமின்மை, சோர்வு, அதீத தாகம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து CHAT GPT-யிடம் முதியவர் கேட்ட அதே கேள்வியை மருத்துவர்கள் வினவியபோது, மீண்டும் சோடியம் புரோமைடையே CHAT GPT பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பின்பற்றியதன் காரணமாக முதியவர் உடலில் புரோமைட் நச்சுத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள், 3 வாரகாலம் அதற்குரிய சிகிச்சை அளித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், CHAT GPT வழங்கும் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாகக் கூடும் எனப் பொதுமக்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.