நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நான்கு வழி சாலை பணிக்காக சின்னேரி பகுதியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
மணல் குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் எனக்கூறிக் கடந்த 13ஆம் தேதி ஏரியில் மண் எடுக்க வந்த ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, செருதூர் கிராமத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மண் குவாரி அனுமதியை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், நாகை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.