ரஷ்ய தயாரிப்பான R-37 VYMPEL வான்வழி ஏவுகணையை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன படைகளை சில நொடிகளில் தரைமட்டமாக்க வல்லது எனக் கூறப்படும் இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள இந்தியா, பல காலமாக இருமுனை போர் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பு பெரும் சவால் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.
இரு நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள எல்லை பிரச்னையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த இருமுனை போர் சவாலை எதிர்கொள்ள இந்தியா பல வழிகளில் தயாராக இருப்பது அவசியம் என்பதால், நவீன போர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ராணுவ படைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே சுதர்சன சக்ரா திட்டம் என்ற பெயரில் புதிய வான் பாதுகாப்பு அமைப்பை, வரும் 2035-ம் ஆண்டிற்குள் உருவாக்க உள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்பை அனைத்து வித அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை ரஷ்ய தயாரிப்பான R-37 VYMPEL என்ற வான்வழி ஏவுகணையை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மேம்பட்ட போர் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், இந்திய விமானப்படையின் நீண்டதூர வான்வழி போர் நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் என நம்பப்படுகிறது. R-37 VYMPEL வான்வழி ஏவுகணை 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட நொடிப் பொழுதில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காட்சி வரம்பிற்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்டதால் இந்த ஏவுகணை, RVV-BD ஏவுகணை என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் மிக நீண்டதூர வான்வழி ஏவுகணைகளுள் ஒன்றான R-37 VYMPEL ஏவுகணை, போர் விமானங்கள், பிற வான்வழி ஏவுகணைகள், கட்டுப்பாட்டு விமானம், குண்டுவீசும் விமானம் போன்ற உயர்ரக இலக்குகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடார் வழிகாட்டுதலில் இயங்கும் இந்த ஏவுகணை, DUAL-STAGE SOLID ROCKET MOTOR-ஐ கொண்டுள்ளது. R-37 VYMPEL ஏவுகணையின் இந்த மேம்பட்ட வடிவமைப்பு, ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் பயணிக்கும் MACH-6 ஏவுகணையைக்கூட முந்திச் செல்ல வழிவகுக்கிறது.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் S-400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பு, சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே பாகிஸ்தானின் போர் விமானங்களையும், ஒரு கட்டுப்பாட்டு விமானத்தையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ வெற்றிக்குப் பின் இந்திய விமானப்படைக்கு R-37 VYMPEL வான்வழி ஏவுகணையை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்த சக்திவாய்ந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் உள்ள 260 சுகோய் Su-30 MKI போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப் பொருத்தப்படும் பட்சத்தில் பாகிஸ்தானின் F-16, சீனாவின் J-20 ஸ்டெல்த் போன்ற மேம்பட்ட போர் விமானங்களுக்கு எதிராக இந்தியா வலுவான தடுப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஃபேல் விமானங்களுடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 110 கிலோ மீட்டர் வரம்புகொண்ட ASTRA MK-1, 150 கிலோ மீட்டர் வரம்புகொண்ட FRENCH MBDA METEOR போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டுள்ள இந்திய விமானப்படையில், R-37 VYMPEL வான்வழி ஏவுகணையும் இணையும் பட்சத்தில் அது நாட்டின் வான்வழி பாதுகாப்புக்குக் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.