மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இல.கணேசனின் உடல், இறுதி அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் அவரது வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள், மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இல. கணேசனுக்குப் பிரியாவிடை அளித்தனர்
இதையடுத்து தேசியக் கொடி போர்த்தப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டிருந்த இல கணேசன் உடலை முப்படை வீரர்கள் சுமந்து சென்றனர். பின்னர் இல கணேசன் உடலுக்கு நாகாலாந்து முதலமைச்சர் நேபியு ரியோ, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.