புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்க நிர்வாகத்தின் வரிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். விநோதமான மற்றும் சுய அழிவுக்கான டிரம்பின் வரிகள் வருங்காலத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் அதிபர் டிரம்ப். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்நாட்டின் பொருளாதாரம் உயர்வதாகவும், உக்ரைன் போருக்கு இந்தியா பணம் உதவி செய்வதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த வரி விதிப்பால் தனது தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று டிரம்ப் கூறி வந்தாலும், அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் அதற்கு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களான ஜவுளிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றிற்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், இதனால் அமெரிக்காவில் விலைவாசி உயரும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பதாக இருக்கும் எனப் பிரபல பொருளாதார நிபுணரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்தியா மீதான அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளை முட்டாள் தனமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வளர்ச்சிக்கான எந்தவொரு நோக்கத்திற்கும் உதவாது என கூறியிருக்கிறார்.
அண்மையில், ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் பங்கேற்ற ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு டிரம்பின் வரிகள் அழிவுகரமானதாக இருப்பதால், இந்த வரிகள் தவறானவை எனத் தெரிவித்தார். மேலும், அரசியலமைப்புக்கு விரோதமான அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனக் குறிப்பிட்டார். பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் தோல்வி அடையும் என்றும் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரித்தார்.
அதிபர் டிரம்ப் ஒரு மாய உலகில் இருப்பதாக விமர்சித்த சாக்ஸ், நீண்டகாலமாக ஆதிக்க சக்தியைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவால், உலகின் எல்லா பகுதிகளிலும் முதலாளித்துவம் செய்ய முடியும் என டிரம்ப் நினைப்பதாகக் கருத்து தெரிவித்தார். அரசியல் ரீதியாகப் புத்திசாலியாகவோ, துணிச்சல் மிக்கவராகவோ இல்லாத டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முடியாத காரணத்தால், இந்தியாவைப் பொருளாதார ரீதியாக வீழ்த்த முயற்சிப்பதாகவும் ஜெஃப்ரி சாக்ஸ் குற்றம் சாட்டினார்.
சீனாவின் ஜி ஜின் பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் பிரேசிலின் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியைப் புகழ்ந்த சாக்ஸ், இந்தியாவின் அளவிடப்பட்ட ராஜதந்திர பதில்களையும் வெகுவாக பாராட்டினார். அமெரிக்கா பொருளாதார ரீதியாக ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா மீது விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்ட சாக்ஸ், இந்த மனப்பான்மை அமெரிக்கப் பொருளாதாரத்தை எந்த வகையிலும் மேம்படுத்தாது எனவும், மாறாக இது பிரிக்ஸ் மற்றும் பிற அமைப்புகளை வலுப்படுத்துவதுடன், அமெரிக்காவை புவிசார் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.