புதுச்சேரியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தவளகுப்பம் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் காவலாளி மட்டும் இரவு பணியில் இருந்த போது மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை எழத்தொடங்கியது. இதையறிந்த காவலாளி காவல்நிலையத்திற்கு தகவலளித்தார். பின்னர் போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கட்டுக்கடங்காமல் தீ எரிந்ததால் 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு போராடி தீ அணைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமிலங்களில் தீப்பொறி பட்டதால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.