பெரும்பாக்கம் அருகே டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி நூக்கம்பாளையம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பிரதான சாலையில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.