அரசுப் பள்ளியில் பயின்று குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சி பி ராதாகிருஷ்ணனின் மறுபக்கத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் சந்திராபுரத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பொன்னுச்சாமி – ஜானகி அம்மாளுக்கு பிறந்தவர் தான் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன். அரண்மனை புதூர் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் தனது ஆரம்பக் கால கல்வியைப் பயின்று சி.பி. ராதாகிருஷ்ணன் சிறுவயதிலிருந்தே தேசத்தின் மீதும் தெய்வத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்துள்ளார்.
தங்களுடன் அருகில் அமர்ந்து கல்வி பயின்ற நண்பர் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவது அளவில்லா மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவிக்கின்றனர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆரம்பக் கால நண்பர்கள்.
கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னுடைய மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அப்பள்ளியின் முதன்மை மாணவராக வலம் வந்திருக்கிறார்.
அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்ற போது மாணவர் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெய்வ பக்தி மிகுந்த, மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய மாணவராகவே திகழ்ந்ததாகவும் சக பள்ளி தோழர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் படிப்பு மற்றும் அரசியலில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வ மிக்கவராக இருந்தார். கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிரிக்கெட் மீதும் அளப்பரிய ஆர்வம் இருந்திருக்கிறது. இந்திய குடியரசுத் துணை தலைவராகத் தேர்வாக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தங்களின் பள்ளியில் பயின்றவர் என்பதிலேயே பெருமையாக இருக்கிறது என்கின்றனர் தற்போதைய பள்ளி நிர்வாகிகள்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேவராக தனது பயணத்தைத் தொடங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன், ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், 1998 மற்றும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர், 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவர், பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது உடன் படித்த நண்பர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பெருமை தரக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது.