ஒடிசா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் மொத்தம் 9 தங்கச் சுரங்கங்கள் இருப்பது முதல் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியத் தங்கச் சுரங்கத் துறை வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1980-களில் ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் தங்கப் படிமம் இருப்பதாக முதன் முதலாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கியோஞ்சர் மாவட்டத்தின் குஷாகலா, கோபூர் மற்றும் ஜலதிஹா ஆகிய இடங்களில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஆய்வு நடத்தியது.
மீண்டும் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில், கியோஞ்சர் மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகள் இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் இந்த 51 கனிமத் தொகுதிகள் உள்ளதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்தியாவின் உற்பத்தியில் குரோமைட்டில் 96 சதவீதம், பாக்சைட்டில் 52 சதவீதம் மற்றும் இரும்புத் தாது இருப்புகளில் 33 சதவீதம் ஒடிசாவில் இருந்தே வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை, அம்மாநிலச் சுரங்கத்துறை அமைச்சர் ஒடிசா சட்டப்பேரவையில் முதல் முறையாக அறிவித்தார்.
தியோகார், கியோன்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கியோன்ஜஹார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், தியோகார் மாவட்டத்தில் 1 இடத்திலும் தங்கம் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
எவ்வளவு தங்கம் இருக்கும் என்ற மதிப்பீடுகள் இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், சுமார் 20 மெட்ரிக் டன்கள் வரை தங்கம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவிலேயே உள்ள நிலையில், கடந்த ஆண்டில், 800 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தங்க இறக்குமதியும் ஓரளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக, இந்த கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவதற்கான முயற்சிகளை ஒடிசா அரசு, ஒடிசா சுரங்க கழகம், இந்திய தொல்லியல் துறை ஆகியவை விரைவு படுத்தியுள்ளன. முதல் கட்டமாக, தியோகரில் உள்ள முதல் தங்கச் சுரங்கத் தொகுதியை ஏலம் விடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் ஒடிசாவில் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று கூறப் படுகிறது.
தங்கத்தின் தரத்தை அறிவதற்காக, ஆரம்ப உளவுத்துறை என்ற G3 நிலையில் இருந்து, விரிவான மாதிரி எடுத்தல் மற்றும் துளையிடுதல் என்ற G2 நிலைக்கு தொல்லியல் ஆய்வுகள் முன்னேறியுள்ளன.
ஒடிசாவின் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு, இந்தியாவின் கனிம வளர்ச்சியில் எதிர்பாராத மற்றும் மதிப்புமிக்க திருப்புமுனையாகும்.