பொருளாதார மந்தநிலையால், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சீனா முதலீட்டாளர்களின் உலகளாவிய லாபங்களின் மீதும் வரி வசூலிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் நிதி வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளைச் சீனா முன்னெடுத்துள்ளது. சீன மக்களின் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி விதிக்கும் முயற்சிகளை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, முதலீட்டு வருமானம், ஈவுத்தொகை மற்றும் ஊழியர் பங்கு விருப்பங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான வெளிநாட்டு வருமானத்தைச் சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அயல் நாட்டு முதலீட்டு ஆதாயங்களுக்கு 20 சதவீதம் வரை சீன அரசு வரி விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டவர்களையே இலக்கு என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும், இப்போது,இந்த வரி நடவடிக்கை 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் பட்ஜெட் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துவரும் நிலையில், இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் 360 பில்லியன் டாலரத் தாண்டியுள்ளது.
குறிப்பாக, சீன அரசின் இரண்டு முக்கிய நிதிக் கணக்குகளின் மொத்த வருமானம்,கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரசின் செலவினங்கள் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
மேலும், ஏற்கெனவே திட்டமிடப் பட்ட 5 சதவீத இலக்கை சீனா எட்டாது என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தில் 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், பெரும் பொருளாதார நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷான்டாங் போன்ற நகரங்களில் உள்ள சீனர்கள், தங்கள் அயல்நாட்டு வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடுவதற்காக OECD ஆல் உருவாக்கப்பட்ட உலகளாவிய வரித் தகவல் பகிர்வு கட்டமைப்பின், பொது அறிக்கையிடல் தரநிலையை (CRS) சீனா 2018 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய வருமானத்தை அறிவித்து வரி செலுத்த வேண்டும் என்ற சீனாவின் வரிச் சட்டங்கள் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளன என்றாலும் இப்போது தான் தீவிரமாக அமல்படுத்தப் பட்டுள்ளன.
சீனாவில் முக்கியமான நகரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் உலகளாவிய வருமானத்தில் 20 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான சீன முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை வெளிநாடுகளுக்கு நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும், எல்லை தாண்டிய வர்த்தக இணைப்பு வழியாக ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் பிரதான நில முதலீட்டாளர்கள் 83.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து வருவதையே காட்டுகிறது.