பாகிஸ்தானில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் கூட்டமாக நடக்கும் இறுதிச் சடங்குகள், மீட்பு ஹெலிகாப்டரின் விபத்து என அசாதாரண சூழலால் ஸ்தம்பித்துள்ள பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையாலும், மேக வெடிப்பாலும், கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்த கனமழை, வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 340 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பியூனர் மாவட்டத்தில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளனர். அதே மாகாணத்தில் உள்ள புனேர் மாவட்டத்தில் 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதும், 184 பேர் வரை உயிரிழந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பேரும், கில்ஜித் பல்டிஸ்தானில் 5 பேரும் பேரிடரில் சிக்கிப் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மாயமான பலரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பிற மீட்பு அமைப்புகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுவாட், பஜாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்வதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, ஹெலிகாப்டர் ஒன்றும் எதிர்பாராத விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த, விமானி உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தது அந்நாட்டின் நிலையை மேலும் துயரமாக்கியுள்ளது.
அதே வேளையில், பாகிஸ்தானின் வட-மேற்கு பகுதிகளில் கனமழை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பாகிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்து உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.