மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும், மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
தொடர்ந்து பல பகுதிகளில் ‘மிகக் கனமழை’ பெய்யும் எனச் சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாமென மாநகராட்சி நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.