மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பண்டிகைகால போனஸ் வழங்குவது குறித்து 10 நாட்களுக்குள் ஆலோசித்து தீர்மானிக்கப்படும் எனவும் ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் அக்டோபர்-நவம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அனிதா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர்.
போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை தூய்மைப் பணியாளர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.