உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய அதிபர் டிரம்ப், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை தூங்க வைக்க முயற்சிப்போம் எனக் கூறினார். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் உக்ரைன் உள்கட்டமைப்பை அழிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். டிரம்ப் தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இது திருப்புமுனை மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, 3 ஆண்டுகளாக ரஷ்ய தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான விருப்பம் இல்லாத நிலையில், இதுவொரு முக்கியமான நாள் எனக் கூறினார். அமைதியை அடைய விரும்பினாலும் நீதியை உறுதி செய்ய விரும்பினாலும் அதனை நாம் ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் அடங்கிய நான்கு வழி உச்சிமாநாட்டை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஏனெனில் ஐரோப்பிய கண்டத்தின் முழு பாதுகாப்பையும் பற்றி தாம் பேசுவதாக கூறினார்.