மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அம்மாநிலத்தில் உள்ள நாந்தெட் மாவட்டத்தின் உம்ரி பகுதி தாசில்தாராக இருந்து வந்தவர் பிரசாந்த் தோரட். இவர் அண்மையில் அருகில் உள்ள மற்றொரு மாவட்டமான லத்தூரில் உள்ள ரெனாபூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அவர் ஏற்கனவே பணி செய்த உம்ரி தாலுகா அலுவலகத்தில், பிரசாந்த் தோரட்டுக்கு பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது, ஊழியர்கள் முன்னிலையில் பிரசாந்த் தோரட் அலுவலக நாற்காலியில் அமர்ந்தபடி, நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘யாரானா’ படத்தின் “யாரா தேரி யாரி கோ” என்ற பாடலை மெய்மறந்து பாடினார். வீடியோ வைரலான நிலையில் தாசில்தார் பிரசாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.