வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடல்களை தர்மஸ்தலா நேத்ரவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நபர் தற்போது அதனை மறுத்திருப்பதால் பூகம்பம் கிளம்பியுள்ளது. கர்நாடகா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய புகார்தாரரின் வாக்குமூலம் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்த ஒருவர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடலை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2012க்கு பின் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், புதைக்கப்பட்ட பெண்கள் தன்னுடைய கனவில் வந்ததாலும், மனசாட்சி உறுத்தியதாலும் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் கூறிய அந்த நபர், சில எலும்புக் கூடுகளையும், மண்டை ஓடுகளையும் பெல்தங்கடி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.
கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்த நிலையில் அதற்கான உத்தரவைக் கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது.
மஞ்சுநாதா கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நேத்ரவதி ஆற்றங்கரையோரம் புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டது. மொத்தமாக 13 இடங்களைத் தோண்டி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சில எலும்புக் கூடுகளும் மண்டை ஓடுகளும் கிடைத்தன.
விசாரணையைத் தீவிரப்படுத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தன் கவனத்தைப் புகார் தாரரின் பக்கம் திருப்பியது. புகார்தாரரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது.
தர்மஸ்தலாவில் பணியாற்றிய பின்பு சென்னைக்கு வந்த புகார்தாரரை, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அங்கு வேலை செய்த போது சட்டவிரோதமாக உடல்களைப் புதைத்ததாக வாக்குமூலம் அளிக்குமாறு மிரட்டியுள்ளனர்.
தர்மஸ்தலா புனிதத் தலம் என்பதால் அங்கு வந்து உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்பதால் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் உடல்களைச் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுப் புதைத்ததாகப் புகார்தாரர் விளக்கிய பின்பும், சட்டவிரோதமாகவே புதைத்ததாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
அதோடு, காவல்துறையிடம் சென்று என்ன சொல்ல வேண்டும், நீதிமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை புகார்தாரருக்கு அக்கும்பல் பயிற்சி அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் அடையாளம் தெரியாத கும்பல் கொடுத்தவை தான் என்பதும், புகார் அளித்தவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் பொய் புகார் அளித்த நபரைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீதான நடவடிக்கையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தொடங்கியுள்ளது. புகார் தாரரை மிரட்டியதாகக் கூறப்படும் அந்த அடையாளம் தெரியாத கும்பல் யார்?, புகார் தாரர் அளித்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரப்படுத்தியுள்ளது.