இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச் சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா- சீனா இடையே நீண்டகாலமாகவே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபரில் கசானில் பிரதமர் மோடியும், ஜி ஜின் பிங்கும் சந்தித்துப் பேசியதற்குப் பின், இருதரப்பு உறவிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, முதல்முறையாக,சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவுக்கு வந்துள்ளார்.
24வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு டெல்லி வந்திருக்கும் வாங் யீ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்தியா-சீனா உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாக “மூன்று பரஸ்பர” அம்சங்களின் முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியிருக்கிறார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் உரையாற்றிய ஜெய்சங்கர், இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கலான காலகட்டம் ஏற்பட்ட நிலையிலும், அதிலிருந்து மீண்டு, முன்னேற்றத்தை நோக்கி இருநாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார்.
வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் இருநாடுகளும் ஒத்துழைப்புக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. பிரச்சனைகளைப் பரஸ்பரம் கவனமாகக் கையாளுதல், பரஸ்பர நலன் ஆகிய அம்சங்கள் முக்கியம் என்றும், கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாகவோ போட்டியாகவோ, மாறக்கூடாது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு முன்னேற்றத்திற்கும், எல்லையில் அமைதியைப் பேணுவது அவசியம் என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், சர்வதேச அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.
இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தி வருவதாகக் கூறிய வாங் யீ, தற்போதைய பேச்சுவார்த்தைகள் மூலம், ஒருவரின் வெற்றிக்கு இன்னொருவர் பங்களிப்பு செய்ய முடியும் என்றும், அதுமட்டுமின்றி ஆசியா மற்றும் உலகத்துக்குத் தேவையான உதவியையும் ஒருசேர வழங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருதரப்பு நல்லுறவு மேம்படுவதன் அறிகுறியாக, இந்தியாவுக்கு உரங்கள், அரிய மண் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மீதான தடைகளைச் சீனா நீக்கியுள்ளது. விவசாயத்துக்காக சுமார் 30 சதவீத உரங்களையும், மின்னணு துறைக்கு மிகவும் தேவையான மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்திக்கும் தேவையான அரிய மண் தாதுக்களையும், சாலை மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களையும் இனி எந்த வித தடையும் இன்றி இந்தியாவுக்குச் சீனா வழங்கும்.
இதனை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உரங்கள், அரிய மண் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஏற்றுமதிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இது இந்தியத் தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான விநியோகச் சங்கிலியை எளிதாக்கும்.
கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாகவே இருந்துவந்த தடையை நீக்கி, உரங்கள், சுரங்கப்பாதை இயந்திரங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களை இந்தியாவுக்கு வழங்கச் சீனா ஒப்புக்கொண்டது ஒரு பெரிய முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
50 சதவீத வரி விதிப்பு என இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில், இந்தியாவுடன் சீனா நெருக்கமாகி வருகிறது. ஏற்கெனவே ரஷ்யா இந்தியாவின் உற்ற தோழனாக உள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா மூன்று நாடுகளும் நல்லுறவைப் பேணுவது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாக,சர்வதேச அரசியலில் பார்க்கப்படுகிறது.