திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றத் தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் எனக் கடந்த நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கான இடத்தை முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கடந்த சில மாதங்களுக்கு முன் நேரில் பார்வையிட்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அவரிடம் முறையிடப்பட்டது.
மேலும், புதிய பேருந்து நிலையம் கட்ட வழங்கப்பட்ட இடத்தின் மூலம், தனி நபருக்குச் சொந்தமான இடங்களை அதிக லாபத்திற்கு விற்க முயற்சி நடப்பதாகவும் எம்.எல்.ஏ-வான பொன்முடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதற்கு உரியத் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றத் தமிழக அரசை வலியுறுத்தி அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்று அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது தனி நபரின் லாபத்திற்காகப் பொதுமக்களுக்கு உகந்ததாக இல்லாத ஒரு இடத்தை பேருந்து நிலையம் அமைக்க திமுக-வினர் தேர்வு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.