அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது என ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டபோது நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் ஒன்று கடந்து செல்ல முயன்றது.
அப்போது, அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாகச் செல்வார் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது எனத் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பிவின், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல எனக் கூறினார்.
இந்த போலியான அறிக்கை குறித்து தங்கள் சங்கத்திலிருந்து மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் பிவின் தெரிவித்துள்ளார்.