நீதித்துறையை விமர்சித்துப் பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் மனுத் தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சீமான் மீதான புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.