தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான வழக்கறிஞருக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர்.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் சமீபத்தில் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நள்ளிரவில் போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இந்நிலையில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பாரதிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதி ஆஜரானார். அப்போது அவருக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து பேட்டியளித்த ஜனநாயக வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் சங்கர், வழக்கறிஞர்களுக்குச் சம்மன் அனுப்புவதன் மூலம் போராட்டத்தை முடக்க போலீசார் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.