திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழாவின் 7ஆம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுச் சிவப்புச் சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் சிவப்பு வண்ண மலர்களை தூவி அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.