தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்தின் சதி இருப்பதாகக் கர்நாடக மாநில பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நாட்டையே உலுக்கும் வழக்கில் தமக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த புகாருக்கு அமைதி காப்பதன் மூலம் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி அமைந்துள்ளது. இந்த கோயில் அருகே ஓடும் நேத்ரவதி ஆற்றங்கரையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களைப் புதைத்ததாக முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தன்னை கட்டாயப்படுத்தி இந்த விவரத்தைப் பேசச் சொன்னதாகப் புகார்தாரர் பிறழ் சாட்சி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகார்தாரர் அளித்திருக்கும் வாக்குமூலம் உண்மையானது தானா? சென்னையிலிருந்து புகார்தாரரை மிரட்டிய கும்பல் எது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகப் பகிரங்கத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த் செந்தில், 2009 ஆம் ஆண்டுமுதல் 2012ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பல்லாரியின் உதவி கலெக்டராகவும், சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டி கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் மஞ்சுநாதா கோயிலின் பெருமையையும், புகழையும் சிதைக்க சசிகாந்த் செந்தில் முயற்சிப்பதாகவும் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தர்மஸ்தலா வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்க முதலமைச்சர் சித்தராமையாவுக்கு துளியளவும் விருப்பமில்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கொடுத்த அழுத்தமே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் காரணம் எனவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார். மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க நடைபெறும் சதியை முறியடிப்பேன் எனவும், இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தர்மஸ்தலா வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவரின் பெயரும் அடிபடுவது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகாந்த் செந்திலைத் தொடர்புப் படுத்தி எழுந்திருக்கும் புகாருக்கு உரியப் பதிலை வழங்காமல் அமைதி காப்பது அவர் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.