தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், வெவ்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை இந்து முன்னணி தொடர்ந்து தமிழக அரசுக்கு எச்சரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தை அமைதி பூங்கா என்று கூறி மக்களையும், தன்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருவதாக விமர்சித்துள்ளார்.
இந்து தலைவர்கள் கொலை தொடர்பாக கைதானவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், இது காவல்துறையின் மெத்தனப் போக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.