சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, தாய்லாந்து அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் டிஜிட்டல் வாலட் திட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் சுற்றுலா பயணிகள் வாங்கும் பொருட்களின் விலையில் தள்ளுபடியும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இந்தியர்களை ஈர்ப்பதற்காக பாங்காக்கில் தயாரிப்புப் பயிற்சி மற்றும் விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா நிபந்தனைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், உள்நாட்டு விமான போக்குவரத்தை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமேசிங் தாய்லாந்து கிராண்ட் டூரிசம் அண்ட் ஸ்போர்ட்ஸ் இயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான இந்த திட்டம் தாய் ஏர் ஏசியா, பாங்காக் ஏர்வேஸ், நோக் ஏர், தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனல், தாய் லயன் ஏர் மற்றும் தாய் வியட்ஜெட் ஆகிய ஆறு விமான நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.