ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இரவின் இருளில் வெளிச்சமின்றி ஏவுகணை அமைப்பை சரிசெய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் ஹசியாவாஸ் கிராமத்தை சேர்ந்த பாலே சிங் என்பவர் விமானப்படையின் S-400 வான் பாதுகாப்பு பிரிவில் லாஞ்சர் பொறுப்பாளராக இருந்தார்.
பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இது குறித்து பேசிய பாலே சிங், இரவின் இருளில் வெளிச்சமின்றி ஏவுகணை அமைப்பை சரிசெய்து பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தார்.
ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற அவருக்கு வீர தீர பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுரு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.