வரதட்சணை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வர மூர்த்தி, தாய் சித்ரா தேவி ஆகியோர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்ததாகவும், திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததே தற்கொலைக்கு காரணம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவை துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாகவும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமின் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முக்கிய சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்து விட்டதால், சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் 3 பேருக்கு விதிக்கப்பட்டது.