தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் கட்சிக்கென தொலைக்காட்சி அவசியம் என்று பேசிக்கொண்டிருந்தபோது, முதலில் பூத்களை சரி செய்யுங்கள் என்று கட்சியினரை ஊக்குவித்தவர் அமித்ஷா என தெரிவித்தார்
நிறைந்த அமாவாசையில் இயற்கையாகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளது. 10 வயது குழந்தை முதல் மூதாட்டிகள் வரை யாரும் நடமாட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளதாக அவர் கூறினார்.
24 லாக்அப் டெத்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாரி என்று சொல்லி கடந்து செல்கிறார். கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் அவலமே நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத கூட்டணி என முதல்வர் கூறுகிறார். இன்னும் நிறையபேர் கவர்ச்சியோடு கட்சித் தொடங்கி வருகிறார்கள். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போர். நீதிக்கும்-அநீதிக்குமான போர்.தர்மம் வென்றாக வேண்டும். ஆகவே, தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் இன்றே சபதமேற்க வேண்டும். வருங்காலங்களில்உங்களுக்கு அளிக்கும் பணிகளைத் திறம்பட செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து அழகுபார்த்த கட்சி பாஜக. தற்போது தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராகப் போட்டியிடுகிறார். .
திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல்- டீசல் விலை குறைப்போம், மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடிப்போம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடனுதவி அளிப்போம், அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியடங்களை நிரப்புவோம், பள்ளிகளில் இணையவசதியுடன் கணினிமயமாக்குவோம், மாதந்தோறும் மின்கட்டணம் எடுத்து கட்டணச்சுமை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர். அவை நிறைவேற்றப்படவில்லை எனறும் அவர் கூறினார்.
தேர்தல்தோறும் பல்வேறு வாக்குறுதி கொடுப்பது திமுகவின் வழக்கம், தேர்தல் முடிந்த பின்பு அதை மறப்பது அவர்களது பழக்கம். இன்னும் 8 மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.