2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர்,தமிழரான அப்துல் கலாமை நாட்டின் முதல் குடிமகன் பதவியில் அமர்த்தி அழகு பார்த்ததாகவும் மாநிலங்களவை தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வீற்றிருப்பார் என தெரிவித்தார்.
தமிழ் மண், மக்கள், மொழி, பண்பாடு என அனைத்தையும் பாதுகாத்தவர் பிரதமர் மோடி என்றும், திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தமிழுக்கு பிரதமர் பெருமை சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தேடித்தேடி அழித்ததாக தெரிவித்த அவர், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.
பதவி பறிப்பு மசோதாவை கருப்பு சட்டம் எனக்கூற முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என்றும், பிரதமர், முதலமைச்சர் என யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு செல்ல வேண்டுமென அவர் கூறினார்.
சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? என பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜியை அவர் கோடிட்டு காட்டினார்.
இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக எனவும், திமுக ஆட்சியாளர்கள் ஏராளமான ஊழல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என இண்டி கூட்டணி விரும்புகிறது என்றும், உதயநிதி தமிழக முதல்வராக வர வேண்டும் என திமுகவினர் கனவு காண்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் ஒரு காலத்திலும் ராகுல் காந்தி பிரதமராக ஆக முடியாது என்றும், உதயநிதி முதல்வராக ஆக முடியாது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
2026-ல் அதிமுக – பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டை மேன்மை அடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.