பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ரவுடி கார்த்திக், கணேஷ் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நண்பர்களான இருவரும் மூங்கில் ஏறி கட்டபொம்மன் தெருவில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது, யார் பெரிய ரவுடி என இருவரும் தகராறில் ஈடுபட்ட நிலையில், கார்த்திகை கணேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அடியாட்களுடன் வந்து கணேஷை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கார்த்திகை தேடி வருகின்றனர்.