சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
எங்கு பார்த்தாலும் பணம். லாக்கரை திறந்தால் கத்தை கத்தையாக பணம். மேசை ட்ராயரை திறந்தால் கட்டுக்கட்டாக பணம். ஒரு புறம் கோடிக்கணக்கில் வெளிநாட்டு கரென்சிகள். மறு புறம் கிலோ கணக்கில் நகைகள்.
அனைவரையும் மலைக்க செய்யும் அளவிலான இந்த பணம், நகை அனைத்தும், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை. சட்டவிரோத சூதாட்டம் மூலம் வருவாய் ஈட்டிய புகாரின் பேரில் அமலாக்கத்துறை இவற்றை பறிமுதல் செய்துள்ளது.
சூதாட்டம் காரணமாக பலர் தங்கள் பணத்தையும், வாழ்க்கையையும் அழித்து வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில்தான், வீரேந்திர பப்பி என்ற கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோதமாக வருவாய் ஈட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவாவில் மட்டும் Puppy’s Casino Gold, Ocean Rivers Casino, Puppy’s Casino Pride, Ocean 7 Casino, Big Daddy Casino என்ற 5 கேசினோக்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். மேலும், King567, Raja567, Puppy’s 003, Rathna Gaming என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட தளங்களையும் அவர் நடத்தி வந்துள்ளார்.
இவர்தான் இப்படி என்றால், அவரது சகோதரரான கே.சி. திப்பேசாமி உள்ளிட்டோர் துபாயை மையமாக கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த அமலாக்கத்துறை, காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பி-க்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது.
அப்போது கைப்பற்றப்பட்டவைதான் முன்னர் பார்த்த பணம், நகை, வெளிநாட்டு கரன்சி அனைத்தும். இதுவரை 12 கோடி ரூபாய் ரொக்கம், 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 10 கிலோ வெள்ளி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, 4 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
மேலும், சிக்கிம் மாநிலத்தில் வைத்து காங்கிரஸ் எம்எல்ஏவையும் கைது செய்த அமலாக்கத்துறையினர், அம்மாநில நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பிறகுதான், இந்த சூதாட்ட முறைகேட்டில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது தெரிய வரும்.