தேமுதிக கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் நடிகருமான, மறைந்த ‘பத்ம பூஷன்’ கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேமுதிக கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகருமான, மறைந்த ‘பத்ம பூஷன்’ கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்கிற உயரிய நோக்கத்தோடு செயல்பட்டவர், ஏராளமான மக்கள் பணிகளை செய்ததன் மூலம் நமது நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர்.
தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிடித்தமான திரைக் கலைஞரும், அரசியலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயலாற்றியவருமான மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவர்களது நினைவுகளை போற்றுவோம் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேமுதிக நிறுவனர், பத்மபூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் அமரர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மாபெரும் கொடையாளர். கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.
மறைந்தாலும் அவர் கொடுத்த கொடையாலும், மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடிகர் சங்கத் தலைவராக சிக்கலில் தவித்த சங்கத்தை மீட்ட சாதனையாளர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட செயல்பட்ட திறமையாளர். இன்றைய நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள்.
நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.