கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒன்பது மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
விருத்தாச்சலம் அருகே உள்ள பவளங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் வாகனம் ஒன்று விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் இயங்கி வரும் தனியார்ப் பள்ளிக்கு சென்றது.
பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது திடீரென வாகனம் பிரேக் பிடிக்காமல் நிலைத் தடுமாறி தண்டவாளத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
பள்ளி மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வேனில் இருந்த 9 மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சமயத்தில் அவ்வழியே ரயில் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.