மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர்ச் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உலர்ச் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை, நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், இதுவரை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
மேலும் உலர்ச் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
இல்லாவிட்டால், இப்புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்ததோடு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.