பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைச் சீனா கட்டி வருகிறது. அதற்குப் பதிலடியாக, சியாங் நதியில் பல்நோக்குத் திட்டம் தடுப்பணையை இந்தியா கட்ட தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேசம் அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரம்மாண்டமான அணையைக் கட்டி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் பிரம்மபுத்திரா நதியைப் பார்வையிட்ட சீனப் பிரதமர் லீ கேகியாங், அணைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தார். அதன் பின்னர்க் கடந்த ஆண்டில் அணைக் கட்டுமான பணியைச் சீனா தொடங்கியது
168 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்ட பட்டுவரும் இந்த அணையின் மூலம் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனச் சீனா கருதுகிறது. உலகிலேயே மிகப்பெரிய நீர் மின்சார அணையாக இதனைச் சீனா கட்டமைத்து வருகிறது.
சீனாவின் இந்த அணை, இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்றும், அருணாச்சலப் பிரதேசப் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போகும் என்றும் அம்மாநில முதல்வர் பெமா காண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கு அணைக் கட்டுவதன் மூலம் தண்ணீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, நீர் என்ற அணுகுண்டை இந்தியா மீது போட சீனா முயற்சி செய்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த அணையால், சியாங், பிரம்மபுத்திரா மற்றும் ஜமுனா ஆகிய நதிகள் கணிசமான அளவில் வறண்டு போகும். அதனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். திடீரெனச் சீனா அணையைத் திறந்து விட்டால், வெள்ளத்தால், நிலச் சரிவுகள்,பூகம்பம் ஏற்பட்டு இயற்கை வளங்கள் அழிந்து போகும். அப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் நதியில் 11,000 மெகாவாட் நீர்மின் திட்டமான சியாங் பல்நோக்குத் திட்டத்தை இந்தியா செயல்படுத்த தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 5,500 மெகாவாட் அளவும்,இரண்டாம் கட்டத்தில் 3,750 மெகாவாட் என இரண்டு தனித்தனி திட்டங்களாகச் சியாங் அமைக்கப்பட்டுள்ளது. அதிகத் திறன் கொண்ட ஒற்றைப் பல்நோக்கு திட்டமாக இது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் மேம்பாட்டுக்காக 325 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்களையும் அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து தேசிய நீர்மின்சாரக் கழகம் உறுதியளித்துள்ளது. சியாங் பல்நோக்குத் திட்டத்தை அங்குள்ள 27க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் ஆதி பழங்குடியின மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், சியாங் அணையின் முன்-சாத்தியக்கூறு அறிக்கைக்கான கணக்கெடுப்பை நடத்துவதற்காகச் சென்ற அதிகாரிகளைத் தடுத்துக் கணக்கெடுப்பு இயந்திரங்களை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தியுள்ளனர். தேசிய நீர்மின்சாரக் கழகத்தின் ஊழியர்களைத் தடுக்க,முக்கிய சாலைகளில் தற்காலிகக் கண்காணிப்பு சாவடிகளை உள்ளூர் மக்களே அமைத்துள்ளனர்.
எந்தவொரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைச் சமாளிக்க, இந்திய திபெத் எல்லைக் காவல் படை மற்றும் CAPF உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கிராமவாசிகள் வேறு இடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான கல்வி மற்றும் அவசர உள்கட்டமைப்புக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாகச் செலவழிக்க தேசிய நீர்மின்சாரக் கழகம் உறுதியளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மூன்று கிராமங்களில் உள்ள மக்கள் பல்நோக்குத் திட்டத்தின் முன்-சாத்தியக்கூறு அறிக்கையை முறையாக அங்கீகரித்துள்ளனர். சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத சீனா, பிரம்மபுத்திரா நதியின் தண்ணீரை நம்பியிருக்கும் நாடுகளுக்குத் தண்ணீர்த் தர வேண்டும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.
எனவே, இந்தியாவின் சியாங் பல்நோக்குத் தடுப்பணை திட்டம் மிகவும் முக்கியமானது என்று நீர்மேலாண்மை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.