பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் சக்திவாய்ந்த, பல அடுக்கு வான் பாதுகாப்பு கவசத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைந்த சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் மூலம், தனது ‘சுதர்சன் சக்ரா’ திட்டத்தின் முதல் படியில் வெற்றிகரமாக இந்தியா கால் எடுத்து வைத்துள்ளது. நாடு முழுவதும் அனைத்துக் குடிமக்களையும் முக்கியமான உள்கட்டமைப்புக்களையும் பாதுகாக்க,இந்தியா உருவாக்கும் ‘சுதர்சன் சக்ரா’ என்ற புதிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கனவே ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்துச் சாதனைப் படைத்தது.
இந்தச் சூழலில், எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பது மட்டுமல்லாமல், வலுவாகப் பதிலடி கொடுப்பதற்கும் 2035ம் ஆண்டுக்குள் ஒரு உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா உருவாக்கும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திரத் தின உரையில் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பாதுகாப்புத் திட்டம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆயுதத்தின் பெயராலேயே ‘சுதர்சனச் சக்ரா’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அமெரிக்காவிடம் Patriot missile system மற்றும் Terminal High Altitude Area Defense system ஆகியவை உள்ளன. கூடுதலாக “golden dome” என்ற அதிநவீனப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் S-400 பாதுகாப்பு அமைப்பு உள்ளது. இஸ்ரேலிடம் Iron Dome உள்ளது.
செயற்கைக்கோள்கள், நீண்ட தூர ரேடார்கள், UAVகள், வான்வழி எச்சரிக்கைத் தளங்கள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியாவின் ‘சுதர்சன் சக்ரா’ ஒருங்கிணைத்துச் செயல்படும் என்றும், ரஷ்யாவின் S-400 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Integration of Quick Reaction Surface-to-Air Missiles-யை DRDO வடிவமைத்துத் தயாரித்துள்ளது. இதற்கிடையில், மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் Directed Energy Weapon ஆகியவற்றை முறையே Research Centre Imarat ஆய்வுக் கூடமும், DRDOவின் Center for High Energy System & Sciences துறையும் உருவாக்கியுள்ளன.
சுதர்ஸன் சக்ரா திட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் Project Kusha திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இது விரிவாக்கப்பட்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்று தனித்துவமான இன்டர்செப்டர் ஏவுகணை வகைகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
M1 இன்டர்செப்டரின் முதல் மேம்பாட்டுச் சோதனை இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது. Project Kusha-வின் முழு செயல்திட்டமும் 2028ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, இந்தப் பாதுகாப்பு அமைப்பு, இந்திய விமான படை மற்றும் இந்திய கடற்படையில் 2029ம் ஆண்டுக்குள் சேர்க்கப்படும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
Project Kusha திட்டத்தின் இரண்டாம் கட்டம், ரஷ்யாவின் S-500 Prometheus ப்ரோமிதியஸை விடவும் அதிகத் திறன்கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் 600 கிமீ வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுதர்சன் சக்ரா திட்டத்தின் கட்டுமான தொகுதிகள் ஏற்கனவே உள்நாட்டு இரண்டு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைப் பாதுகாப்பு (BMD) திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2,000 கிமீ தூரத்தில் வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணித்து அழிக்கும் வகையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. விரைவில், தலைநகர் டெல்லியைச் சுற்றிப் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் இப்போது, ஒரு எண்டோ-வளிமண்டல இடைமறிப்பு ஏவுகணையின் வெற்றிகரமான விமான சோதனை, 5,000 கிமீ தூரத்தில் வரும் அணுசக்தி திறன் கொண்ட எதிரிகளின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் பாதுகாப்பு கவசம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
‘சுதர்சன் சக்ரா ‘என்பது இடைமறிப்பு ஏவுகணை மட்டுமல்ல. மாறாக, அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் தானியங்கி AI-ஆல் இயக்கப்படும் நெட்வொர்க் ஆகும். இதன், உடனடி முடிவுகளை எடுக்கும் அமைப்பின் திறன், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திரள்கள் போன்ற நவீன அச்சுறுத்தல்களுக்கு நேரடியாகப் பதிலடிக் கொடுக்கும். எதிரியின் ஏவுகணைகளைக் கண்டறிவது முதல் இடைமறிப்பு தாக்குதல் வரையிலான அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நடத்தப்படும் என்பது சுதர்சன் சக்ராவின் சிறப்பம்சமாகும்.
‘சுதர்ஷன் சக்ரா’ திட்டம், வெறும் இராணுவத் திட்டம் மட்டுமல்ல, முழு நாட்டுக்குமான பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் ஒரு தேசிய அளவிலான பாதுகாப்புத் தொழில்துறைத் திட்டமாகும். அதாவது, ஒரு கவசத்தை உருவாக்குவது மட்டுமல்ல; உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும், அடுத்த தலைமுறை அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு தொழில்துறைத் தளத்தை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதையும். புவிசார் அரசியல் மாற்றங்களால் ஏற்படும் போர்சூழலில், வெற்றியை உறுதி படுத்துவதையும் சுதர்சன் சக்ரா திட்டம் எளிதாக்குகிறது.