ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.
அதிர்ஷ்டம்.. சமானியரைத் திடீர் கோடீஸ்வரராக மாற்றும், வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆந்திராவில் அப்படி அடித்த அதிர்ஷ்டம் ஒன்று, சமானியர்கள் பலரைப் பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது.
ஆந்திராவின் ராயலசீமா, கர்னூர், அனந்தபூர் மாவட்டங்களில் தற்போது தலைகாட்டியுள்ள மழை, வயல்வெளிகளில் அழுக்கு படிந்திருந்த வைரக்கற்களை ஜொலிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக வயல் வெளிகளில் விவசாயிகளும், கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து விலைமதிப்பற்ற வைரக்கற்களைச் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
மழைக்குக் குளிக்கும் நிலங்களில் இருந்து வைரக்கற்களை எடுப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளக் கிராம மக்கள் விரும்புகிறார்கள். அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்…
பெரவலி கிராமத்தில் விவசாயத் தொழிலாளியான வெங்கடேஸ்வர ரெட்டி, உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு 15 லட்சத்திற்கு வைரத்தை விற்றதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் நில உரிமையாளரான பஜ்ரங்லால், தனது 40 ஏக்கர் நிலத்தில் கிராம மக்கள் வைரக் கற்களைத் தேடி வருவதாகவும், அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.
வைரத்தைத் தேடும் மக்களுக்குத் தண்ணீர், உணவு கூட தனது குடும்பத்தினர் வழங்குவதாகத் தெரிவித்தார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசுலு, அரியவகை வைரத்தைக் கண்டுபிடித்து அதனை 2 கோடி ரூபாய்க்கு விற்பனைச் செய்த செய்திகளும் கேள்விப்படுபவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இதுபோன்ற நம்பக்கையூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு எத்தனைக் கோடீஸ்வரர்கள் வைரக் கற்களால் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை இங்குள்ள கிராம மக்கள் எண்ணிக் கொண்டே தேடும் பணியைத் தொடர்கிறார்கள். அவர்களது தேடலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.