உத்தரபிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் நடந்த கொடூரக் கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. இளம்பெண்ணின் கணவர்ச் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், மாமனாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவத்தின் பகீர்ப் பின்னணியை விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
திருப்பூரில் கடந்த ஜூன் மாதம் கணவர் வீட்டாரால் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்பட்ட ரிதன்யா என்ற இளம்பெண் திருமணமான இரண்டே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியொரு நினைத்துபார்க்க முடியாத சம்பவம்தான், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அரங்கேறியிருக்கிறது
இளம்பெண்ணை, கணவரும், மாமியாரும் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது… இந்தச் சம்பவம் குறித்து இணையத்தளத்தில் தீயாய் பரவும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியில் உறைவைக்கிறது.
இக்கொடூரத்தை நேரில் பார்த்த இளம் பெண்ணின் பிஞ்சு மகன் அளித்துள்ள வாக்குமூலம் பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே நாளில் விபினின் சகோதரர் ரோகித்திற்கும், நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கும் திருமணம் நடந்துள்ளது.
நிக்கி-விபின் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், வரதட்சணைப் பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் திருமணமான இரண்டாவது ஆண்டிலிருந்தே குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் விபின், அவரது தாயாருடன் சேர்ந்து நிக்கியைக் கடுமையாக தாக்கியுள்ளனர். நிக்கி மீது ஆசிட் ஊற்றிய அவர்கள் இரக்கமே இல்லாமல் தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தபோது நிக்கிப் படிக்கட்டுகளில் நடந்த பகீர் வீடியோவும் இணையத்தில் வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறதுது.
வரதட்சணையாக 36 லட்சம் ரூபாயைக் கொடுக்கத் தவறியதால், தனது கண் முன்னாலேயே சகோதரி நிக்கியை உயிருடன் தீ வைத்து எரித்ததாகக் காஞ்சன் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
காஞ்சனின் அளித்த புகாரின் அடிப்படையில், விபின் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின்போது தப்ப முயன்ற விபினைப் போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். நிக்கியின் கணவரைத் தொடர்ந்து அவரது மாமியார்த் தயா பதி, மைத்துனர் ரோஹி கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகச் சத்வீர் பதியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகள் நிக்கியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, கொலையாளிகளைச் சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்றும், அவர்களது வீடு இடிக்கப்பட வேண்டும் என்றும் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். தனது மகள் ஒரு அழகு நிலையம் நடத்தி தனது மகனை வளர்த்து வந்ததாகவும், அவர்கள் அவளைச் சித்ரவதை செய்து கொலைச் செய்துவிட்டதாகவும் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.
போலீஸ் விசாரணையில் சகோதரிகள் இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனலில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தததும், “Makeover by Kannchan.” என்ற பெயரில் பியூட்டி பார்லருக்கான வீடியோக்களைப் பதிவிட்டும் வந்தது தெரியவந்துள்ளது. இவர்களது வீடியோக்கள் 2.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது, ஏற்கனவே நடத்திவந்த பார்லரை மீண்டும் திறக்க விரும்பியது போன்ற காரணங்களால் கணவர்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், நிக்கியைக் கொலை செய்ததில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று விபின் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.