பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு, பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டாம் என இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், பாலிசிதாரர்களின் சிகிச்சைக்கான கட்டணத்தை மருத்துவமனைகளுக்கு முழுமையாகத் திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
தன் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தைக் கழித்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப, மருத்துவமனைகளுக்கு வழங்கும் கட்டணத்தை உயர்த்த மறுப்பு தெரிவிப்பதாகவும், மாறாகக் கட்டணத்தை குறைக்க அழுத்தம் தருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பஜாஜ் அலையன்ஸ் காப்பீடுதாரர்களுக்குப் பணமில்லாமல் சிகிச்சை அளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பஜாஜ் அலையன்சில் காப்பீடு செய்துள்ள நோயாளிகளுக்குப் பணமில்லாமல் சிகிச்சை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளன.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பிற சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனப் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.