கொடைக்கானலில் காரில் சுற்றுலா வந்தவர்களை உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் கால விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருகைத் தரும் நிலையில், திருச்சியில் இருந்து கொடைக்கானலுக்குக் காரில் ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர்.
கொடைக்கானல் மலைச்சாலையில் யார் முந்திச் செல்வது என்பது தொடர்பாக உள்ளூர் வாகன ஓட்டுநருடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
பெருமாள் மலைப் பகுதிக்கு வந்தபோது உள்ளூர் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாகச் சிலர் காரை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காரின் முகப்பு கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த காரில் இருந்தவர்கள் தங்களை மன்னித்து விடுங்கள் என்றும், தங்களை விட்டு விடுமாறும் கெஞ்சியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் வாசிகள் வழிவிட்டுச் செல்லும் வகையில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சுற்றுலா பயணிகளைத் தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.