இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் பற்றி எழுதப்பட்ட “on a mission” புத்தகம் கவனம் பெற்று வருகிறது. உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட பல்வேறு சாகசங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்ததில் அவரது பங்கு குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருந்து வருகிறார். இவர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு ஆப்ரேஷன்களில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தபோது எந்த இடத்தில் வைத்து அதனைத் தயாரித்தது என்பதை இவர்தான் கண்டுபிடித்தார்.
இதனை மையமாக வைத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் ஆப்ரேஷன் மஜ்னு என்ற பெயரில் திரைப்படம் கூட எடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரது வாழ்க்கைப் பயணம் சாகசங்கள் நிறைந்தது.
அஜித் தோவல் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மிகவும் பிரபலம். அதே நேரத்தில் அவர்ப் பெரியளவில் பங்களிப்பாற்றிய பல நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே கவனம் பெற்றுள்ளன. அதில் முக்கியமானது, சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைய அவர் அளித்த பங்களிப்பு.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது சிக்கிம் அதன் ஒரு பகுதியாக இல்லை. தனிப் பிராந்தியமாகவே இருந்தது. அதன் இளவரசராகத் தோண்டுப் என்பவர் இருந்தார். இவர் 1963ம் ஆண்டு ஹோப் குக் என்ற அமெரிக்கப் பெண்ணை கரம்பிடித்தார்.
அதன் மூலம் ஹோப் குக் சிக்கிமின் இளவரசியாகவும், பின்னர் ராணியாகவும் மாறினார். சிக்கிமைத் தனது நாட்டின் ஒரு மாநிலமாகச் சேர்க்க இந்தியா முயன்று வந்த நிலையில், அவர் அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தார். அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் ஏஜென்ட் என விமர்சிக்கப்பட்ட அவரை உளவு ராணி எனப் பலரும் அழைத்தனர்.
இந்நிலையில் 1971ம் ஆண்டு வங்கதேசப்போர் நடைபெற்றபோது அமெரிக்கா, பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தது. எனவே, ராணி ஹோப் குக் முயற்சியால், சிக்கிம் வேறு நாடுகள் வசம் சென்றுவிடுவதைத் தடுக்க விரும்பியது இந்தியா. சிக்கிமை இந்தியாவுடன் இணைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய ஒருவரை நியமித்தது. அவர்தான், அஜித் தோவல்.
சிக்கிம் சென்று மக்களோடு மக்களாக வசிக்கத் தொடங்கிய அவர், மக்களின் மனநிலைக் குறித்து அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். முடியாட்சிக்கு எதிரான மனநிலையில் சிக்கிம் மக்கள் உள்ளதையும் அவர் அறிந்துகொண்டார்.
மேலும், இந்தியாவுடன் சிக்கிம் இணைய வேண்டும் என அந்த மக்கள் விரும்புவதையும் தெரிந்து கொண்டார். மேலும் அரசியல் தலைவர்களுடனும் அவர்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது களஆய்வு குறித்த அறிக்கையை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் அஜித் தோவல்.
இதனிடையே, 1973ம் ஆண்டு சிக்கிமில் மன்னருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. நிலைமைக் கைமீறி செல்வதை அறிந்த ராணி ஹோப் கும் அமெரிக்காவுக்குத் தப்பி சென்றார். அடுத்த 2 ஆண்டுகளில் சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. இப்படி, சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற முக்கிய பங்களிப்பாற்றினார் அஜித் தோவல்.